நெல்லியாம்பதி மலைப்பாதையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்துள்ள நெல்லியாம்பதி மலைப்பாதையில் காட்டுயானை ஒன்று வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

நெம்மாராவிலிருந்து நெல்லியாம்பதிக்கு 25 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையாகும். இங்குள்ள தோட்டப்பயிர்களை ருசித்து உண்டவாறு காட்டுயானைகள் கூட்டம் முகாமிட்டு வருகின்றன. சுற்று வட்டாரங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, பாக்கு, தென்னை மற்றும் பலா போன்ற பயிர்களை காட்டுயானைகள் சேதப்படுத்தி வருகின்றன.

யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் வனத்துறைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் யானை கூட்டம் சென்றாலும் இரவு நேரங்களில் இவை மீண்டும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலையோரங்களான நெல்லியாம்பதி கை்க்காட்டி, ஐயப்பன் கோயில், போத்துண்டி அணை சாலை ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் குட்டியானைகளுடன் முகாமிட்டு வாகனங்களை மறித்து பயணிகளை அச்சுறுத்தி வருகின்றன.

இதனால், மலைப்பாதையில் செல்லக்கூடிய  வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர். இதனால், நெல்லியாம்பதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாகனங்களை வழிமறிக்கும் காட்டு யானையை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: