செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடி பாதுகாப்பு பணியில் 22 ஆயிரம் போலீசார்: நேரு உள்விளையாட்டு அரங்கம் முழுவதும் தீவிர சோதனை

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்காக மட்டும் 22 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா வரும் 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ம் தேதி பிற்பகல் 4.30 மணிக்கு தனி விமானம் மூலம் குஜராத் மாநிலத்தில் இருந்து சென்னை வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு வருகிறார். பிறகு சாலை மார்க்கமாக அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்த பிறகு அன்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.

மறுநாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமாளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தலைமையில் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையை தொடர்ந்து பிரதமருக்கு நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு அமைப்பது. அதற்காக மொத்தம் 22 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணிக்கு நியமிப்பபது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை காரில் வரும் பிரதமருக்கு வழிநெடுக தமிழ்மரப்புப்படி உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை சாலை முழுவதும் சென்னை மாநகர போலீஸ், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு படை என 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்துவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் முழுவதும் தேசிய பாதுகாப்பு படை உட்பட துப்பாக்கி ஏந்தியா போலீசார் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. மேலும், அரங்கம் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையிலான உயர் அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும், பிரதமர் பாதுகாப்புக்கு டெல்லியில் இருந்து என்.எஸ்.ஜி என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் ஒன்றிய உள்துறை அதிகாரிகள், ஒன்றிய உளவுத்துறை அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு குழுவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒன்றிய, மாநில அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள், சர்வதேச செஸ் வீரர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

இதனால் நிகழ்ச்சி நடைபெறும் நேரு அரங்கம் முழுவதும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமான நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் முழுவதும் மோப்ப நாய்கள் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகினறனர். சர்வதேச நிகழ்ச்சி என்பதால் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஒன்றிய பாதுகாப்பு படையினருடன் இணைந்து தமிழக காவல் துறை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா முடிந்து வரும் 28ம் தேதி இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் தங்குகிறார். இதனால் ஆளுநர் மாளிகை முழுவதும் வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிறகு மாறுநாள் 29ம் தேதி அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமாளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்வதால் ஆளுநர் மாளிகை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வரை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் கலந்து கொள்ளும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமாளிப்பு விழா நடைபெறும் 2 இடங்களிலும் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் ஒன்றிய உளவுத்துறை அதிகாரிகள் தமிழக காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு உலக நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழக்குவது குறித்தும் தமிழக காவல் துறை அதிகாரிகள் ஒன்றிய பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிரதமரின் பாதுகாப்பு ஒத்திகை இன்று அல்லது நாளை நடைபெறும் என்று உயர் போலீசார் தெரிவித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளும் தமிழக காவல் துறை சிறப்பாக செய்து வருகிறது.

Related Stories: