பைக்காரா அணை நீர்மட்டம் உயர்வால் களைகட்டும் படகு சவாரி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி : தொடர் மழை காரணமாக பைக்காரா அணையின் நீர்மட்டம் உயர்ந்து ரம்யமாக காட்சியளிக்கிறது. இதனால் படகு சவாரி களைகட்டியதால், சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி - கூடலூர் சாலையில் சுமார் 22 கிமீ தொலைவில் பைக்காரா அணை அமைந்துள்ளது. வனப்பகுதிக்கு மத்தியில் இந்த அணை இயற்கை எழில் மிகுந்த சூழலில் ரம்மியமாக அமைந்துள்ளது. இந்த அணையில் உள்ள நீரை கொண்டு சிங்காராவில் நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், பைக்காரா அணையில் இருந்து கடநாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது. அணை பகுதியில் சுற்றுலா துறை கட்டுப்பாட்டில் படகுத்துறை இயங்குகிறது.  இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிந்து படகு பைக்காரா அணையில் படகு சவாரி செய்கின்றனர். இங்கு இயக்கப்படும் ஸ்பீட் படகு பிரசித்தி பெற்றது. நீரை கிழித்து கொண்டு செல்லும் ஸ்பீட் படகில் சவாரி செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்தது.

ஆனால் பைக்காரா உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால், அணைகளில் நீர்மட்டம் உயராத நிலையில், மற்றொரு புறத்தில், மின் உற்பத்திக்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் பைக்காரா அணையில் இருந்து நீர் எடுக்கப்பட்டது. இதனால், நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால், அணையில் படகுகள் இயக்குவதில் சிரமம் இருந்தது. தென்மேற்கு பருவமழையும் ஜூன் மாதத்தில் குறைந்த அளவு தான் பெய்தது.

இச்சூழலில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு இம்மாத துவக்கம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக பைக்காரா அணை பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால், அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து ரம்யமாக காட்சியளிக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி. இதில், தற்போது 75 அடி அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இதற்கிடையே செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் ஓரிரு வாரங்களில் அணை முழுமையாக நிரம்பும் வாய்ப்புள்ளது. பைக்காரா அணையில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து காட்சியளிக்கும் நிலையில், படகு சவாரி செய்ய ஆர்வத்துடன் குவியும் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: