தாரமங்கலத்தில் தடையை மீறி நடந்தது எருதாட்டத்தின் போது கிணற்றில் விழுந்த காளை-உயிருடன் மீட்பு

மேச்சேரி : சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் உள்ள பெரியாம்பட்டி மாரியம்மன் கோயிலில், ஆடித் திருவிழாவை தொடர்ந்து எருதாட்டம் நடத்தப்படும். கடந்த மூன்று ஆண்டுக்கு முன், கோயில் விழாவில் நடைபெற்ற எருதாட்டத்தின் போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, எருதாட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர், கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகள் எருதாட்டம் நடத்தவில்லை. தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று சுற்றுவட்டார மக்கள், கோயிலுக்கு திரண்டு வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர், எருதாட்டதிற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஏற்கனவே மோதல் சம்பவம் நடந்த நிலையில், எருதாட்டம் நடத்த போலீசார் தரப்பில் அனுமதி கொடுக்கவில்லை.

இந்நிலையில், தடையை மீறி பெரியாம்பட்டி கோயில் வளாகத்தில் 90 காளை மாடுகளை கொண்டு எருதாட்டம் நடத்தப்பட்டது. குறுகலான இடத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல், அடுத்தடுத்து காளைகளை ஓட விட்டு இளைஞர்கள் பின் தொடர்ந்து சென்றனர். உரிபொம்மைகளை காட்டி உசுப்பேற்றியதால், இளைஞர்களை இழுத்துக் கொண்டு காளைகள் தறிகெட்டு ஓடின. மேலும், பார்வையாளர்கள் பகுதியில் புகுந்து அங்கிருந்தவர்களை முட்டி மோதி தள்ளின. அங்குள்ள கிணற்றுக்கு அருகிலேயே, பாதுகாப்பற்ற முறையில் எருதாட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், துள்ளிக்குதித்து ஓடிய காளை ஒன்று, கிணற்றில் விழுந்து தத்தளித்தது. உயிருக்கு போராடிய காளையை, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கயிறு கட்டி, சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். அனுமதியில்லாமல் எருதாட்டம் நடந்தாலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: