உடுமலை மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு-வாரச்சந்தையில் இடநெருக்கடியால் மக்கள் அவதி

உடுமலை : உடுமலை வாரச்சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், இடநெருக்கடி காரணமாக வாகனங்களை நிறுத்த முடியாமல் விவசாயிகளும், வியாபாரிகளும் அவதிப்படுகின்றனர்.உடுமலை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் தக்காளிகள் உடுமலையில் உள்ள வாரச்சந்தை மற்றும் தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது, விளைச்சல் அதிகரித்துள்ளதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. தினசரி 7 ஆயிரம் பெட்டி தக்காளி வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 14 கிலோ கொண்ட பெட்டி, 140 டன் அளவுக்கு வந்துள்ளது.இவை டெம்போ, சரக்கு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், மொத்தம் 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட சந்தை வளாகத்தில், சுமார் 3 ஏக்கரில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

நகராட்சி நிர்வாகம் சார்பில் இப்பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்தக்கூட இடமில்லாமல் சாலையோரம் நிறுத்துகின்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதுபற்றி, கோட்டாட்சியர் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் முறையிட்டனர்.

 சீரமைப்பு பணியை உடனடியாக முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விலை வீழ்ச்சி

தக்காளி விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘ஏக்கருக்கு ரூ.65 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். 1500 பெட்டி தக்காளி அறுவடையாகிறது. பெட்டி 100 ரூபாய்க்கு மேல் விற்றால்தான் லாபம் கிடைக்கும். முன்பு ரூ.140 முதல் ரூ.200 வரை விற்றது. தற்போது ரூ.100-க்கும் குறைவாகத்தான் விற்கிறது. பெட்டி 20 ரூபாய்க்கூட விற்பனையாகிறது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.வாரச்சந்தைக்கு நேற்று 3 டன் மிளகாய், 7 டன் தட்டைப்பயிர் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர்.

Related Stories: