ஆசிரியர் நியமன முறைகேடு விசாரணை சும்மா... ஜவ்வு மாதிரி இழுத்தடிக்க கூடாது: அமலாக்கத் துறைக்கு திரிணாமுல் கண்டிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணையை குறிப்பிட்ட கெடுவுக்குள் முடிக்கும்படி அமலாக்கத் துறையை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வலிறுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடந்த நிதி முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும், அமலாக்கத் துறை நேற்று முன்தினம் இம்மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பிரபல தமிழ் நடிகை அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் சோதனை நடத்தியது.

இதில், அர்பிதா முகர்ஜியின் வீட்டில்  ரூ.21 கோடி பணம் கட்டுக்கட்டுமாக கிடைத்தது. இதையடுத்து, அர்பிதா முகர்ஜியும், பார்த்தா சட்டர்ஜியும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். முதல்வர் மம்தா தலைமையிலான அரசுக்கு இது பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ள சம்பவம், இந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். பல வழக்குகளில் ஒன்றிய ஏஜென்சிகள், விசாரணையை பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றன. சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு விசாரணை கடந்த 2014ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அதேபோல்,  2016ம் ஆண்டு முதல் நடந்து வரும் நாரதா டேப் வழக்கிலும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. சட்டம்  தனது கடமையை செய்யும். இதில் எவ்வளவு பெரிய தலைவர்கள் சம்பந்தப்பட்டு இருந்தாலும் திரிணாமுல் தலையிடாது. வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கும் (அர்பிதா), திரிணாமுல்  கட்சிக்கும் தொடர்பு இல்லை’’ என்றார்.

Related Stories: