கிணத்துக்கடவு மார்க்கெட்டில் போதிய விலை கிடைக்காததால் தக்காளி குப்பையில் கொட்டும் அவலம்

மதுக்கரை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தென்னைக்கு அடுத்தபடியாக தக்காளி, வெண்டைக்காய், பச்சை மிளகாய், தட்டை பயிர்கள் போன்றவற்றை அதிகளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இதில் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி விவசாயம் நடைபெற்று வருகிறது. அவர்கள் உற்பத்தி செய்யும் தக்காளி உள்ளிட்ட விவசாய பொருட்களை கிணத்துகடவில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். இதனை பெருமளவில் கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்து அங்குள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள்.

தற்போது பருவமழை பெய்து வருவதால் பொள்ளாச்சி, உடுமலை ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே கிணத்துக்கடவு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து உள்ளது. நேற்று முன்தினம் கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு 5 டன் தக்காளியை விற்பனைக்கு வந்தது. பின்னர் நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய் வரை விலை போனது. இதனால் விவசாயிகள்  ஏமாற்றமடைந்தனர். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட தக்காளியை வாங்க வியாபாரிகள் யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் மார்க்கெட்டில் தக்காளி கேப்பாரற்று போனது.

இதனால் விவசாயிகள் கொண்டு வந்த தக்காளிகளை வேறுவழியின்றி அங்கேயே குப்பையில் கொட்டிவிட்டு சென்றனர். கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.30 வரை விலை போனது. ஆனால் தற்போது பருவ மழை பெய்ய துவங்கியதிலிருந்து படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் ரூ.5க்கு விலை போனது.

Related Stories: