சிவகங்கை மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி தொடரும் பண மோசடிகள்: போலீசில் குவியும் புகார்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்யும் புகார்கள் போலீசில் ஏராளமாக குவிந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆனால் மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லும்படி தொழில்கள் எதுவும் இல்லை. இதனால் பெரும்பலானோர் சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். வெளி நாடுகளில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

சிங்கப்பூர், மலேசியா, மஸ்கட், துபாய், பக்ரைன், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் அதிகப்படியானோர் வேலைக்கு சென்றுள்ளனர். கட்டிட தொழிலாளர்களாகவும், ஹோட்டல் தொழிலாளர்களாகவும் அதிகப்படியானோர் செல்கின்றனர். இப்பகுதியிலுள்ள ஏஜெண்டுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஏஜெண்டுகளிடம் அளிக்கும் பணத்திற்கு எந்த ரசீதும் வழங்கப்படுவதில்லை. சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே முறைப்படி டெஸ்ட் நடத்தி ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மற்ற நாடுகளுக்கு செல்பவர்கள் பல்வேறு வகையான விசா மூலம் அனுப்பப்படுகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடு அனுப்புவதாக கூறி பணத்தை மோசடி செய்வதாக புகார் அளிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆசிய நாடுகள், அரபு நாடுகளுக்கு அனுப்புவதாக பண மோசடி செய்ததாக முன்பு புகார்கள் எழும். ஆனால் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, துருக்கி போன்ற நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார்கள் அளிக்கின்றனர். வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறிவிட்டு ஒட்டுமொத்தமாக அனுப்பாமல் பண மோசடி செய்வது, பணி செய்வதற்கான விசா என கூறி விட்டு சுற்றுலா விசா வழங்குவது உள்ளிட்ட ஏராளமான புகார்கள் போலீசில் அளிக்கப்படுகின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட புகார்கள் தரப்பட்டுள்ளன. இவை தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோசடி செய்த 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிலர் கூறுகையில், ‘‘மோசடி ஏஜெண்டுகளிடம் சிக்கினால் ஒட்டுமொத்த வாழ்க்கையும் வீணாகிவிடும். ஏஜெண்டுகளிடம் அளித்த பணத்தை திரும்பபெற வெளியாட்கள் மூலம் பேசினால் அளித்ததில் ஏதேனும் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். ஆனால் போலீசில் புகார் அளித்தால் வழக்கு நடக்கும். பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோர் புகார் அளிப்பதில்லை’’ என்றனர்.

Related Stories: