கரூர் அருகே பாசன வாய்க்காலில் புதர் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை-அகற்ற கோரிக்கை

கரூர் : கரூர் பஞ்சமாதேவி பிரிவு சாலையில் உள்ள பாசன வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகள் அகற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அமராவதி ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக செட்டிப்பாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் சென்று வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டம் வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனி பிரிவுக்கு முன்னதாக செல்லும் பாசன வாய்க்காலில் அதிகளவு ஆகாயத்தாமரைகள் மண்டிக்கிடப்பதால் தண்ணீரின் போக்கை மாற்றி வருகிறது. மேலும் வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயதாமரை செடிகள் தண்ணீரில் வாழும் உயிரினங்களின் வசிப்பிடமாகவும், கொசுக்கள் உற்பத்தி கூடமாகவும் இருந்து வருகிறது.

ஆகாய தாமரை வளர்ந்துள்ளதால் எந்தவிதமான பயனும் இல்லை. கால்நடைகளுக்குகூட உணவாக பயன்படாது. மாறாக பாசனத்திற்கு இடையூறாகவே உள்ளது. தண்ணீரின் போக்கில் செல்லும் குப்பை, கூழங்களும் செடிகளுக்கிடையே தேங்கி தேங்கி புதர்போல் மாறி விடுகிறது. நாளடைவில் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே பாசன வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை உடனடியாக அகற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆகாயத் தாமரைகளை முற்றிலும் அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: