குருமலை- வெள்ளக்கல் மலைக்கு ₹49.83 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்-கிராம மக்கள் மகிழ்ச்சி

அணைக்கட்டு : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வேலூர் ஒன்றியம் ஊசூர் அடுத்த குருமலையில் குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல்மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. குருமலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளக்கல் மலைக்கு சாலை வசதியில்லை. இதுகுறித்து  ‘‘தினகரன்’’ நாளிதழில் செய்தி வெளியானது. இந்தநிலையில், கடந்த மாதம் குருமலையில் ஆய்வு செய்த கலெக்டரிடம் குருமலை_வெள்ளக்கல்மலைக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

அவரும் உறுதியளித்திருந்தார்.

அதனைதொடர்ந்து, வனத்துறைக்கு சொந்தமான இடங்களை வனத்துறையினர் ஆய்வு செய்து அனுமதி வழங்கினர். இதையடுத்து நூறு நாள் வேலை திட்டத்தில் 2 கட்டமாக ₹49.83 லட்சத்தில் வௌ்ளக்கல்மலைக்கு ஓரடுக்கு ஜல்லி சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யபட்டது. சாலை அமைக்க அனுமதி, நிதியும் வரப்பெற்றதை தொடர்ந்து அதற்கான பணிகளை தொடங்கி, பூமிபூஜைபோடும் நிகழ்ச்சி மலையில் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.  

வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதாஞானசேகரன், பிடிஓ ராஜன்பாபு, மாவட்ட கவுன்சிலர் த.பாபு, பிடிஒ அலுலக பணி மேற்பார்வையாளர் சுப்பிரமணி, தமிழ்செல்வி, சாலை ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரிகாசி, வனகாப்பாளர்கள் ராகவேந்திரன், சிவா, வனக்காவலர் நவீன்குமார், ஊராட்சி துணை தலைவர் ஜெயசங்கர், வார்டு உறுப்பினர்கள் பூங்கொடிசேகர், வெங்கடேசன், வாசு உடனிருந்தனர். சாாலை அமைக்கும் பணி தொடங்கியதால் குருமலை, வெள்ளக்கல்மலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: