தலைஞாயிறு பேரூராட்சியில் 4096 சதுர அடியில் பிரமாண்டமான செஸ்போர்டு வரைந்து விழிப்புணர்வு-கலெக்டர் பார்வையிட்டார்

வேதாரண்யம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேருராட்சியின் சார்பில் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் 64 அடி நீளம், 64 அடி அகலத்தில் 4096 சதுர அடிகளில் ஒரு டன் சுண்ணாம்பு, ஒரு யூனிட் எம். சாண்ட் கொண்டு மிக குறைந்த செலவில் வரையப்பட்ட பிரமாண்டமான செஸ்போர்டு வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு பாராட்டினார். முன்னதாக பேரூராட்சி அலுவலகத்தில் வரவேற்பு அறையில் செஸ்போர்டு வடிவில் மாற்றி அமைக்கப்பட்டதை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் செயல் அலுவலருடன் செஸ் விளையாடினார். பின்பு செயல் அலுவலர் குகன், கலெக்டருக்கு செஸ்போர்டு பரிசளித்தார்.

சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் சர்வதேச போட்டிகள் நடைபெற உள்ளதை பொதுமக்களிடம் பிரபல படுத்த தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகன், அரசு மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 4096 சதுர அடிகள் பரப்பில் பிரமாண்டமான செஸ் கட்டங்கள் வரைய செய்திருந்தார்.தலைஞாயிறு பேரூராட்சி மன்றத் தலைவர் செந்தமிழ்ச் செல்வி பிச்சையன் தலைமையில் துணைத்தலைவர் கதிரவன் முன்னிலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் முயற்சியினை பாராட்டினார்.

பின்னர் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து சிறப்பாக ஈடுபட்டு வரும் பேரூராட்சி பணியாளர்கள் குமார், கொளஞ்சிராஜன், அகிலா, சுரேஷ், சரவணன் மற்றும் சவுந்தர் ஆகியோரை பாராட்டி செஸ் போர்டுகள் பரிசாக வழங்கினார்.விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: