செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிரொலி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரம்: மாவட்ட கலெக்டர் உத்தரவு

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாமல்லபுரத்தில் வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை தனியார் ரிசார்ட்டில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில், 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். இதற்காக, போட்டி நடைபெறும் இடம், மாமல்லபுரத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு மாமல்லபுரம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டுமென செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர், சென்னை புளு கிராஸ் அமைப்புடன் இணைந்து, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியை நேற்று தொடங்கினர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவின்பேரில், மாமல்லபுரம்  சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க தொடங்கி உள்ளோம்’ என்றனர்.

Related Stories: