ஈகுவார்பாளையம் ஊராட்சியில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கும்மிடிப்பூண்டி,: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி குமரன்நாயக்கன் பேட்டையில் எழுந்தருளி உள்ள பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் திருக்கோயிலின் 17ம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி குமரன்நாயக்கன் பேட்டையில் உள்ளது, வெக்காளியம்மன் திருக்கோயில். இங்கு,  ஒவ்வோராண்டும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த தீமிதி விழாவில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மட்டுமல்லாது, ஆந்திர மாநிலம் நெல்லூர், சித்தூர் மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் காப்பு கட்டி அம்மனை வேண்டி தீ மிதிப்பது வழக்கம். இந்த ஆண்டும் தீமிதி திருவிழாவை ஒட்டி தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து,  கணபதி ஹோமம், நவசண்டியாக பூர்வாங்க பூஜைகள், தெருக்கூத்து, கோலாட்டம் போன்றவை நடைபெற்றது. பின்னர், நவச்சண்டியாக ஹோமம் தொடங்கிய நிலையில், கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை,  பூர்ணாஹூதி,  வெக்காளி அம்மனுக்கு மகா கலசாபிஷேகம், தீபாரதனை, பிரச்சாதம் வழங்குதல் நிகழ்வும் நடைபெற்றது.

இதில், விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் வெக்காளி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் விதமாக நேற்றுமுன்தினம் தீமிதித்தனர். இந்நிகழ்வில், 1080 பேர் தீமிதித்து, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இந்த தீமிதி விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ ஜெ.கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவர் உஷா தர், கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன், பாஜ மாநில அரசு தொடர்பு துறை செயலாளர் எம்.பாஸ்கர், மாவட்ட தலைவர் சரவணன், மாநில ஓபிசி அணி செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.   

Related Stories: