உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் அன்னுராணி தகுதி

ஓரிகான்: உலக  தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஓரிகான் நகரில் நடக்கிறது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை பெண்களுக்கான  ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. அதன் பி பிரிவு தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை அன்னுராணி பங்கேற்றார். அவர் 59.60மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து 5 வது இடத்தை பிடித்தார்.   ஜப்பான் வீராங்கனை ஹருகா 64.32மீ,  சீனாவின்  ஷியிங் 63.88மீ,  ஆஸ்திரேலியாவின் கெல்சே லீ 61.27மீ,  செக் குடியரசின் நிகோலா 60.58மீ எறிந்து முதல் 4 இடங்களை கைப்பற்றினர். ஈட்டியை எறிந்த தொலைவுகளின் அடிப்படையில் பி பிரிவில் இருந்து 7,  ஏ பிரிவில் இருந்து 5 என மொத்தம் 12 வீராங்கனைகள் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிப் பெற்றுள்ளனர்.

அந்த 12 பேரில் இந்திய வீராங்கனை அன்னுராணி  8வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் அன்னுராணி சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் 63.82மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்துள்ளார். எனவே அவர்  பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இறுதிச் சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை  நடக்கிறது. இன்று காலை ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுகள் நடக்கின்றன. ஏ பிரிவில் தங்க நாயகன் நீரஜ் சோப்ராவும், பி பிரிவில் ரோகித் யாதவும் களம் காணுகின்றனர். நீரஜ் சமீபத்தில்  நடந்த டைமண்ட் லீக் தொடரில் 89.94மீ தொலைவுக்கு ஈட்டி எறிந்துள்ளார்.

அவர் இடம் பெற்றுள்ள பிரிவில் சக போட்டியாளர்களில் அதிகபட்சமாக ஜெர்மனி வீரர்  ஆண்ட்ரியாஸ் 92.06மீ, செக் குடியரசு வீரர் ஜேகுப் 90.88மீ, டிரினிடாட்-டொபாகோ  வீரர் கேஸ்ஹார்ன் 90.16மீ தொலைவுக்கு ஈட்டியை எறிந்துள்ளனர். பி பிரிவில் இடம் பெற்றுள்ள கிரேனடா வீரர் ஆண்டர்சன் 93.07மீ, கென்ய வீரர் ஜூலியஸ் 92.72மீ தொலைவுக்கு ஈட்டியை எறிந்தவர்கள். ரோகித் இதுவரை 82.54மீ தொலைவுக்கு எறிந்ததே அதிகபட்சமாகும். இறுதிச் சுற்று திங்கட்கிழமை அதிகாலையில் நடக்கும்.

Related Stories: