காஞ்சிபுரம் மாநகராட்சியை தூய்மை மாநகரமாக மாற்றுவதே நோக்கம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை தூய்மை நகரமாக மாற்றுவதே நோக்கம் என தூய்மை பணியை ஆய்வு மேற்கொண்டு காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40 தூய்மை பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் இரவு நேர தூய்மை பணி கடந்த 15 நாட்களாக நடந்து வருகிறது. இரவு நேரங்களில் தூய்மை பணி மேற்கொள்வதால் பெருமளவில் குப்பை அகற்றப்பட்டு கிடங்கில் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் பெருமளவு குப்பை தேக்கத்தை குறைக்க முடிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன், பேருந்து நிலையம், காமராஜர் சாலை, காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தூய்மை பணி மேற்கொள்ளும்போது கடையின் முன்பு அதிக குப்பை இருந்தால் கடை உரிமையாளர்களிடம் குப்பை தொட்டி வைத்து அதில் போடுமாறு அறிவுறுத்துங்கள். தொடர்ந்து இதுபோன்று நடைபெற்றால் அபராதம் விதிக்கப்படும். பேருந்து நிலையத்தில் உள்ள கடை வியாபாரிகள் குப்பையை முறையாக சேர்த்து தூய்மை பணியாளர்களிடம் அளித்தால் பேருந்து நிலையம் தூய்மை அடையும். அபராதம் விதிப்பது மாநகராட்சியின் நோக்கமல்ல, தூய்மையான காஞ்சிபுரத்தை உருவாக்குவதே மாநகராட்சியின் நோக்கம். இதற்கு தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.’ என்றார்.

Related Stories: