குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா..!!

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல் செய்தார். குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கலின் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர். துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக அணி சார்பில் ஜெகதீப் தங்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர். பாஜக ஆதரவு பெற்ற ஜெகதீப் தங்கர் நேற்றைய தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மார்கரெட் ஆல்வா பின்புலம்:

மார்கரெட் ஆல்வா, 1942ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்தார். கோவாவின் 17வது ஆளுநராகவும், குஜராத்தின் 23ஆவது ஆளுநராகவும், ராஜஸ்தானின் 20வது ஆளுநராகவும், உத்தராகண்டின் 4ஆவது ஆளுநராகவும் இவர் பணியாற்றியிரு்ககிறார். அதற்கு முன்பாக, ஒன்றிய அமைச்சராகவும் மார்கரெட் ஆல்வா இருந்திருக்கிறார். ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக அறியப்பட்டார். அந்த கட்சியின் காரிய கமிட்டி இணைச் செயலாளராகவும் இருந்துள்ளார். இவரது குடும்பம் அரசியல் பின்புலத்தைக் கொண்டது.

Related Stories: