ரயில் கூரை மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு: மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரை மாவட்டம் கூடல்நகரில் நின்ற ரயில் கூரை மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவர்களில் ஒருவர் மீது   மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை கோட்டத்தில் பெரும்பாலான ரயில்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. அந்த மின் பாதையில் ரயில் இயக்குவதற்காக 25000 வோல்ட் மின்சாரம் செல்கிறது. மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் இருப்பதால் சரக்கு ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் நிறுத்திவைக்கப்படுவது வழக்கம்.

 இந்த நிலையில் அந்த ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள முல்லை நகரை சேர்ந்த பழனி என்பவரின் 17 வயது மகன் விக்னேஸ்வர் தனது நண்பர்களுடன் நின்றுக்கொண்டிருந்த பயணிகள் ரயில் பெட்டியின் மீது ஏறி விளையாடி உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக 25000 வோல்ட் மின்சாரம் பாயும் மின்கம்பியில் உரசி தூக்கிவீசப்பட்டு உடல் கருகி படுகாயமடைந்தார். உடனடியாக மதுரை ராஜாஜி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ரயில் பாதைகளில் மின்சாரம் செல்லும் கம்பிகளை யாரும் நெருங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டும் யாரும் கேட்பதாக இல்லை, விளைவாக இளைஞர் ஒருவரின் உயிர் பலியாகியுள்ளது.

Related Stories: