காஞ்சிபுரம் அருகே ஆன்லைன் டிரேடிங் என கூறி ரூ6 கோடி மோசடி செய்த தம்பதி: காஞ்சி எஸ்பியிடம் உறவினர்கள் புகார்

காஞ்சிபுரம்:  ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி தொடர்ந்து காஞ்சிபுரத்தில் ஆன்லைன் டிரேடிங் என்று கூறி சொந்தகாரர்களிடம் 1 லட்சம் ரூபாய்க்கு மாதம் தோறும் ரூ10 ஆயிரம் தருவதாக கூறி ரூ6 கோடி மோசடி செய்த தம்பதி மீது பாதிக்கப்பட்ட உறவினர்கள் எஸ்பியிடம் இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி புகார் அளித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா. ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு கிராமத்தை சேர்ந்த சாம்பசிவம் என்பவரின் மகன்கள் அதியமான், தனசெழியன், பரத், பாரி, அதியமானின் மனைவி மீரா, தனசெழியனின் மனைவி கங்காதேவி ஆகியோர் ஆன்லைன் டிரேடிங் செய்வதாக கூறி, சூர்யாவிடம் கடந்த பிப்ரவரி மாதம் 2021ம் ஆண்டு முதல் மே மாதம் 2022ம் ஆண்டு வரை சுமார் ரூ3 கோடியே 77 லட்சம் பெற்றுள்ளனர்.

ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் ரூ10 ஆயிரம் தருவதாகவும், ஆறு மாதம் கழித்து அதே ரூ1 லட்ச ரூபாய்க்கு ரூ20 ஆயிரம் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி சூர்யா ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் ரூ10,000 தரும் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி 62 லட்சம் ரூபாயும், ஒரு லட்ச ரூபாய்க்கு ஆறு மாதத்தில் ரூ2 லட்சம் தரும் திட்டத்தின் கீழ் ரூ2 கோடியே 15 லட்சம் ரூபாயும் கொடுத்துள்ளார். இந்த தொகை அனைத்தும் சூர்யா தனது நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரிடம் வசூல் செய்து கொடுத்துள்ளார். இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என சூர்யா மற்றும் அவருடைய நண்பர்கள் பலரும் இதில் முதலீடு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் வரை தவணை முறையாக கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ராஷ்யா - உக்ரைன் போர் காரணமாக பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்ததால் முறையாக கொடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த நிலைமையானது சில வாரங்களில் சரியாகிவிடும் என கூறிய அவர்கள் கிட்டத்தட்ட மூன்று மாதத்தை கடத்தி வந்துள்ளனர். தனது நண்பர்கள் மட்டும் தான் கட்டிய தொகையை திருப்பி கேட்டபோது, 30.5.2022ல் திருப்பி தந்து விடுகிறோம் என கூறியுள்ளனர். ஆனால், திருப்பி தராமல் இருந்துள்ளனர். இதனை அடுத்து 31ம் தேதி நேரில் சென்று பார்த்தபோது பரத் மற்றும் சிலர் உடன் இருந்துள்ளனர். ஆனால், கங்காதேவி உள்ளிட்டோர் சென்னை சென்றுள்ளதாகவும் அவர்கள் பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு வருவதாகவும் 5ம் தேதி பணத்தை தந்து விடுவதாகவும் கூறியுள்ளனர்.

இதேபோல, ஒவ்வொரு முறையும் காலம் தாழ்த்தி வந்தவர்கள் கடைசியாக கடந்த 15ம் தேதி தருவதாக கூறியுள்ளனர். ஆனால், 15ம் தேதியும் குறிப்பிட்டபடி பணம் தராத காரணத்தினால் செய்வது அறியாமல் தவிக்கிறோம் எங்கள் பணத்தை மீட்டு தருமாறு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகரிடம் பாதிக்கப்பட்டோர் மனு அளித்துள்ளனர்.ஆருத்ரா என்ற நிறுவனம் பல ஆயிரம் கோடியை இதுபோன்று டிரேடிங் செய்வதாக ஏமாற்றி பொதுமக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில் உறவினர்களே உறவினர்களிடம் இது போன்று ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் ரூ 10 ஆயிரம் தருவதாகவும், பின்னர், ஆறு மாதம் கழித்து அதே ரூ1 லட்சத்திற்கு ரூ20 ஆயிரம் தருவதாகவும் கூறியுள்ளனர்.

Related Stories: