ஜெயின் கோயிலில் இருந்து 46 சவரன் தங்க பூஜை பொருட்களை திருடிக்கொண்டு தப்பிய பூசாரி கைது: ஆம்னி பேருந்து மூலம் குஜராத் தப்பி செல்ல முயன்றபோது சுற்றிவளைப்பு

சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஜெயின் கோயிலில் 46 சவரன் மதிப்புள்ள தங்க பூஜை பொருட்கள் கொள்ளை அடித்துக்கொண்டு, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து குஜராத் தப்பி செல்ல முயன்ற பூசாரியை போலீசார் கைது செய்தனர். கீழ்ப்பாக்கம் ரங்கநாதன் அவின்யூ பகுதியில் ஸ்ரீ கீழ்பாக் ஸ்வேதாம்பர் மூாத்தி பூஜா என்ற ஜெயின் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ரியல் எஸ்டேட் அதிபர் மனைவி மீனா சாக்ரியா (54) தினமும் பூஜை நடத்துவது வழக்கம்.

அதன்படி கடந்த 13ம் தேதி மீனா சாக்ரியா கோயிலுக்கு சென்றபோது வீட்டில் இருந்து 46 சவரன் மதிப்புள்ள தங்க பூஜை பொருட்கள் கொண்டு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். பிறகு தங்க பூஜை பொருட்களை சாமி சிலை அருகே வைத்துவிட்டு கோயிலை 2 முறை சுற்றி வந்து பார்த்தபோது, சாமி சிலை அருகே வைத்திருந்த பூஜை பொருட்களுடன், பூசாரி மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனே மீனா காக்ரியா, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து  கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஜெயின் கோயிலில் பூசாரியாக வேலை செய்து வந்த குஜராத் மாநிலம் பால்சாட் மாவட்டம் உம்பர்கான் பகுதியை சேர்ந்த விஜய் ராவல் (38), தனது நண்பர் மகேந்திரனுடன் சேர்ந்து தங்க பூஜை பொருட்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், பூசாரியின் செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்தனர். அதில், நேற்று முன்தினம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அவர் சொந்த மாநிலமான குஜராத்திற்கு ஆம்னி பேருந்தில் தப்பிச் செல்ல முயன்றபோது, போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 46 சவரன் மதிப்புள்ள திருடப்பட்ட தங்க பூஜை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மகேந்திரனை தேடி வருகின்றனர்.

Related Stories: