காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு 322 பேர் கொண்ட இந்திய அணி: ஐஓஏ அறிவிப்பு

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடருக்கான பிரமாண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) நேற்று அறிவித்தது. அதில் 215 வீரர், வீராங்கனைகள் மற்றும் 107 பயிற்சியாளர்கள்/நிர்வாகிகள்/ஊழியர்கள்/உதவியாளர்கள் என மொத்தம் 322 பேர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியின் பதக்க வேட்டையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பிடித்த இந்தியா, இம்முறை இன்னும் அதிகமான வெற்றிகளைக் குவிக்கும் முனைப்புடன் முழுவீச்சில் தயாராகி உள்ளது.

ஒலிம்பிக் சாதனையாளர்கள் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), பி.வி.சிந்து (பேட்மின்டன்), மீராபாய் சானு (பளுதூக்குதல்), லவ்லினா போர்கோஹெய்ன் (குத்துச்சண்டை), பஜ்ரங் புனியா, ரவிகுமார் தாகியா (மல்யுத்தம்) ஆகியோர் பதக்க நம்பிக்கை தருகின்றனர். இவர்களுடன் நடப்பு காமன்வெல்த் சாம்பியன்கள் மனிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), வினேஷ் போகத் (மல்யுத்தம்), 2018 ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்), ஹிமா தாஸ் (தடகளம்), அமித் பாங்கல் (குத்துச்சண்டை) ஆகியோரும் பதக்க வேட்கையுடன் களமிறங்குகின்றனர்.

இந்திய அணி மொத்தம் 15 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கிறது. இது தவிர மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா விளையாட்டு போட்டியின் 4 பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். குத்துச்சண்டை, பேட்மின்டன், ஹாக்கி, பளுதூக்குதல், மகளிர் கிரிக்கெட் (அறிமுகம்), மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் இந்தியா பதக்கங்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடகளம், சைக்கிள் பந்தயம், நீச்சல், டேபிள் டென்னிஸ் போட்டிகளிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு பதக்க வேட்டை நடத்தும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு கிராமம் ஜூலை 23ம் தேதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட உள்ள நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் பலர் ஏற்கனவே அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: