குடந்தை பள்ளி தீ விபத்து; 94 குழந்தைகள் கருகி பலியான 18ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம், காசிராமன் தெருவில் கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில், கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ல் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.  ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று 18ம் ஆண்டு நினைவு தினம், குழந்தைகளை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

குழந்தைகளை இழந்த பெற்றோர், தங்களது வீடுகளில் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, குழந்தைகளுக்குப் பிடித்த தின்பண்டங்களையும், புத்தாடைகளையும் வைத்துப் படையலிட்டனர்.

இதேபோல் தீ விபத்து நிகழ்ந்த  பள்ளி முன்பாக நினைவு தின நிகழ்ச்சிகள் நடந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த 94 குழந்தைகளின் படங்கள் அச்சிடப்பட்ட பேனருக்கு மாலையிட்டு அலங்கரித்து,  பெற்றோர்கள், உறவினர்கள், காயமடைந்த மாணவர்கள், அனைத்துப் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் படையலிட்டு, மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் வளையம் வைத்தும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு பெற்றோர்கள் மற்றம் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தீ விபத்து நடந்த பள்ளியிலிருந்து பழைய பாலக்கரையில் அரசால் அமைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை பள்ளியிருந்து பொதுமக்கள் ஊர்வலமாக மகாமக குளத்துக்கு  சென்று மோட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories: