குஜராத் கலவர வழக்கில் சிறையில் உள்ள மாஜி ஐபிஎஸ் அதிகாரி மீண்டும் கைது: சிறப்பு புலனாய்வுக் குழு நடவடிக்கை

அகமதாபாத்: குஜராத் கலவர வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை சிறப்பு புலனாய்வுக் குழு மீண்டும் கைது செய்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில், அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை குற்றவாளி அல்ல என்று சிறப்பு புலனாய்வு அமைப்பு அறிவித்தது. அதனை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கினர். இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்டை கடுமையாக விமர்சித்தார். இதைத் தொடர்ந்து தீஸ்தா கைது செய்யப்பட்டார். மேலும் குஜராத் முன்னாள் டிஜிபி ஆர்.பி.குமாரும் கைது செய்யப்பட்டார். அவர் மீது மோசடி, குற்றவியல் சதி ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் ராஜஸ்தான் வழக்கறிஞரை பொய் வழக்கில் சிக்க வைத்தல் தொடர்பான வழக்கில் சிக்கிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட், கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இவர் குஜராத் கலவரம் தொடர்பான வழக்கிலும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஆர்.பி.குமார் ஆகியோரை போன்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட்டை குஜராத் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று கைது செய்தது. இவரது கைதை அகமதாபாத் குற்றப்பிரிவு டிசிபி சைதன்யா மண்டலிக் உறுதி செய்தார். அதனால் குஜராத் கலவர வழக்கு தொடர்பாக பொய்யான ஆதாரங்கள், மோசடி, குற்றவியல் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: