இங்கிலாந்துடன் முதல் ஒரு நாள் போட்டி `திடீர்’ காயத்தால் கோஹ்லி விலகல்?

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோஹ்லியை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பும் கோரிக்கை விடுத்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு ஆதரவாக பேட்டியளித்தார். இந்த நிலையில், விராட் கோஹ்லி மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், அவர் ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என்று கிரிக்கெட் வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன. எனினும் போட்டி தொடங்குவதற்கு முன்பே இதுகுறித்த தகவல் தெரிய வரும்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த பயிற்சி முகாமில் வீரர்கள் விருப்பம் இருந்தால் பங்கேற்கலாம் என்ற விலக்கு வழங்கப்பட்டது. கோஹ்லி ஃபார்மில் இல்லாததால், அவர் கண்டிப்பாக இந்தப் பயிற்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. இதற்கு அவருக்கு ஏற்பட்ட காயம் தான் காரணம் என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் இன்று மாலை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் ஒரு நாள் போட்டியில் கோஹ்லி பங்கேற்கவில்லை என்றால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

இதனிடையே, கோஹ்லியின் பார்ம் டெஸ்ட் போட்டியை பார்த்து, டி20 போட்டிக்கு முடிவு எடுப்பதும், டி20 போட்டியை பார்த்து ஒருநாள் போட்டிக்கு முடிவு எடுப்பதும், மிகப் பெரிய தவறு. கோஹ்லி கடைசியாக விளையாடிய 11 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6 முறை அரைசதம் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: