4308 டாக்டர், நர்ஸ் பணியிடம் செப்டம்பருக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சங்கரன்கோவில்: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,308 டாக்டர், செவிலியர் பணியிடங்கள் செப்டம்பர் மாதத்துக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சங்கரன்கோவில் அருகே புற்றுநோய் பாதிப்பு உள்ள ஆராய்ச்சிபட்டி கிராமத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2 பேரின் வீடுகளுக்கு சென்ற அமைச்சர், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மூலம் வழங்கப்படும் மருந்துகளை சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று வழங்கினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: ஆராய்ச்சிபட்டியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 1340 பேர் உள்ளனர். அவர்களில் ஒரு சிலருக்கு புற்றுநோயின் பாதிப்பு ஆரம்ப நிலையில் இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 கடந்த 4 நாட்களாக இப்பகுதி முழுவதும் சுகாதாரத்துறையினர் மூலம் தொடர் ஆய்வு செய்தனர். இதில் கர்ப்பப்பை புற்று நோயால் 13 பேரும், மார்பக புற்றுநோய்க்கு 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் புற்றுநோய் அதிகம் தென்படுவதால், அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இன்னும் ஒரு வாரத்திற்குள் இங்குள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் ஊசி இந்த வாரம் முதல் வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்ஸ்கள் என 4308 இடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு, இந்தாண்டு செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: