புறவழிச்சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பெரியபாளையம் பஜாரில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

பெரியபாளையம்: புறவழிச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பெரியபாளையம் பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரியபாளையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு பொங்கல் வைத்து, சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை மொட்டையடித்து, உடல் முழுவதும் வேப்பிலை ஆடை அணிந்து கையில் தேங்காய் ஏந்தி கோயிலை சுற்றி வந்தும், ஆடு, கோழிகளை என பலியிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள். இந்நிலையில், வரும் 17ம் தேதி பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா தொடங்கி 14 வாரங்கள் வெகு விமர்சையாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்றால் திருவிழா நடைபெறவில்லை. இந்த வருடம் திருவிழா தொடங்கினால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அவர்கள் வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்படும்.

இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்த வாகனங்களால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசல் குறைக்க பெரியபாளையம் அருகே வடமதுரை கூட்டுச் சாலை பகுதியில் ரூ.26 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு அப்பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சென்னை - திருப்பதி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது மட்டுமல்லாமல் சாலையின் இருபுறம் உள்ள கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல மிகவும் சவாலாக உள்ளது. மேலும் தற்போது அதிமுக பொதுக்குழு தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பெரியபாளையத்தில் போக்குவரத்து சரிசெய்ய போலீஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

* ஊருக்குள் வரும் கனரக வாகனங்கள்

அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், `தமிழகத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோயில் பெரியபாளையத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி மாத காலங்களில் ஆடி திருவிழா தொடங்கினால் பல பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பக்தர்கள் கொண்டு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் சாலை மற்றும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் சென்னை - திருப்பதி சாலை இருப்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இப்பகுதியில் உள்ள கடைகளால் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. தற்போது அரசு புறவழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும் சாலை பணிகள் நடைபெறவில்லை. சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கனரக வாகனங்களும் ஊருக்குள் வருவதால் நீண்ட தூரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. எனவே புறவழி சாலை பணிகளை விரைந்து முடித்து கனரக வாகனங்களை திருப்பிவிட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும்’ என்றனர்.

Related Stories: