நபிகள் நாயகம் குறித்த நுபுர் சர்மாவின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு!: இந்தியா மீது ஹேக்கர்கள் சைபர் தாக்குதல்..2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய பக்கங்கள் முடக்கம்..!!

டெல்லி: நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக இந்தியா மீது ஹேக்கர்கள் சைபர் தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும் இந்த விவகாரம் முடிவுக்கு வராத நிலையில், நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா மீது ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அசாமில் உள்ள ஒரு செய்தி சேனல் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையத்தள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டன. பாகிஸ்தான் கொடியுடன் நபிகள் நாயகத்தை மதிக்க வேண்டும் என்ற வார்த்தைகளும் அந்த செய்தி சேனலில் ஒளிபரப்பாகியுள்ளது. இதனை உறுதி செய்துள்ள அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார், மலேசியா, இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. இதுகுறித்து மலேசியா மற்றும் இந்தோனேசியா அரசுகளுக்கு அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸ் கடிதம் எழுதியுள்ளது.

Related Stories: