மதுரை மாவட்டத்தில் மே மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தமுடியும்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படும் என ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே பள்ளபட்டியை சேர்ந்த மகாராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எங்கள் ஊரில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 15ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கேட்டோம். பாலமேடு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதை ரத்து செய்து, அனுமதியும், உரிய பாதுகாப்பும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில், ‘‘மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பானவை, விதிப்படி ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே நடத்த அனுமதிக்க முடியும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் தமிழக அரசிடம் மனு அளித்து உரிய நிவாரணம் தேடிக்கொள்ளலாம் எனக்  கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: