ஐதராபாத்தில் ஆந்திராவை சேர்ந்த மாஜி எம்எல்ஏ தலைமையில் சேவல் சண்டை சூதாட்டம்-₹13 லட்சம், 26 கார்கள், 32 சேவல்கள் பறிமுதல்

திருமலை : ஐதராபாத்தில் ஆந்திராவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தலைமையில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெற்றது. போலீசாரை கண்டதும் முன்னாள் எம்எல்ஏ சுவர் ஏறி குதித்து தப்பியோடினார். இதையடுத்து ₹13 லட்சம், 26 கார்கள், 32 சேவல்களை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி  மாவட்டத்தில் சங்கராந்தி பண்டிகைக்கு  முன்னதாகவும், அதன் பின்னர் என 10 நாட்கள்  சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கம். பத்து நாட்களுக்கு பல கோடி ரூபாய் சேவல் சண்டை வைத்து சூதாட்டமாக ஆடப்படுவது வழக்கம். சமீப ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை மட்டுமின்றி மற்ற நாட்களிலும் சேவல் சண்டை சூதாட்டம் போன்று நடைபெறுவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் இருந்த இந்த சேவல் சண்டை சூதாட்டம் தெலங்கானாவிலும் பரவி உள்ளது.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த பட்டான்  செரு மண்டலம், சின்கஞ்சர்லா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில், பெரிய அளவில் சேவல் பந்தயம் நடத்துவதாக  போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பட்டான் செரூ டிஎஸ்பி பீம் ரெட்டி தலைமையிலான போலீஸார் சேவல் சண்டை நடத்தப்பட்டு வந்த பண்ணை வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்று  சோதனை நடத்தினர். போலீசார் வருவதை அறிந்த பலர் முட்புதரில் பதுங்கி ஓடிய நிலையில் சிலர் சுவர் ஏறி குதித்து தப்பி சென்றனர்.  

இதுகுறித்து டிஎஸ்பி பீம் ரெட்டி கூறுகையில், சின்கஞ்சர்லா கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாந்தோட்டத்தில்  பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வந்தனர். போலீசார் வந்தபோது சுமார் 70 பேர் சேவல் சண்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் பலர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இந்த சேவல் சண்டையை ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டம் தெண்டலூர் சட்டமன்ற தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்எல்ஏ சிந்தமனேனி பிரபாகரும், அக்கினேனி சதீஷ், பர்லா னு,  கிருஷ்ணம்ராஜூ ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். இதில்  அக்கினேனி சதீஷ் மற்றும் பர்லா ராஜு உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ சிந்தமனேனி பிரபாகர், கிருஷ்ணம்ராஜூ உள்ளிட்டோர் தப்பியோடிவிட்டனர்.   

தப்பியோடியவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டர்களிடம் இருந்து  பந்தயத்திற்கு பயன்படுத்திய ₹13 லட்சத்து 12 ஆயிரத்து 140 பணம், 32 சண்டை சேவல்கள், 26 கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்’ என்றார்.

Related Stories: