ரேணிகுண்டா வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடியில் கணக்கில் வராத ₹1.50 லட்சம் பறிமுதல்

*மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 3 பேர் கைது

* லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

திருமலை : ரேணிகுண்டா வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ₹1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 3 ேபர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டாவில் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி உள்ளது. இங்கு அதிகளவில் லஞ்சம் பெறுவதாக குற்றசாட்டுகள் வந்தது. இதையடுத்து  திருப்பதி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜனார்த்தன நாயுடு தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, வாகன ஓட்டிகளிடம் இருந்து போக்குவரத்து துறைக்கு தொடர்பில்லாத நாராயாணசாமி, துரைபாபு ஆகியோரை மோட்டார் வாகன ஆய்வாளர் அஜய்குமார் நியமித்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் இருந்து முறைகேடாக பெற்று சோதனை சாவடியில் வைத்திருந்த ₹1 லட்சத்து 50 ஆயிரத்து 780  பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் அஜய்குமார் மற்றும் நாராயாணசாமி, துரைபாபு ஆகியோரை கைது செய்தனர்

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜனார்த்தனன் கூறுகையில், ஆந்திராவில் லஞ்ச பெறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக முதல்வர் ஜெகன் மோகன் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு துறைக்காக தனி மொபைல் செயலியை ஏற்பாடு செய்து அறிமுகப்படுத்தினார். இதில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம்  கேட்டாலோ, ஊழல் செய்தாலோ அதுகுறித்து புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு ரேணுகுண்டா வாகன சோதனை சாவடியில் தொடர்ந்து லஞ்சம் பெறுவதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து புகார்கள் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ₹1லட்சத்து 50 ஆயிரத்து 780 மற்றும் போக்குவரத்து துறைக்கு தொடர்பு இல்லாத இரண்டு தனி நபர்களை வைத்து மோட்டார் வாகன ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்தது தெரிய வந்தது’ என்றார்.

Related Stories: