ஸ்ரீபெரும்புதூரில் ஆம்னி பஸ் தீப்பிடித்து சேதம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் ஆம்னி பஸ் நேற்று தீப்பிடித்து சேதம் அடைந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அருகே குன்றத்தூரில் இருந்து நேற்று காலை வேலூர் நோக்கி ஒரு தனியார் டிராவல் நிறுவனத்தின் சொகுசு ஏசி பஸ் கிளம்பியது. இப்பேருந்தை நீலகண்டன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். பேருந்தில் பயணிகள் யாருமில்லை. இப்பேருந்து ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை வழியே நேற்று காலை 11.30 மணியளவில் முன்பக்க இன்ஜினில் திடீரென கரும்புகை எழுந்தது. இதை தொடர்ந்து, சாலையோரம் பஸ்சை நிறுத்தி இன்ஜினின் மேல்மூடியை டிரைவர் நீலகண்டன் திறந்து, புகையை அணைக்க முயற்சித்துள்ளார்.

அப்போது, இன்ஜினில் தீப்பிடித்து பஸ் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதை பார்த்ததும் டிரைவர் நீலகண்டன் பஸ்சிலிருந்து இறங்கி, பாதுகாப்பான இடத்துக்கு சென்று தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி ஆம்னி பஸ்சில் பரவிய தீயை அணைத்தனர். எனினும், அதற்குள் அந்த பஸ் முழுவதுமாக எரிந்து சேதமானது.

இப்புகாரின்பேரில், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: