திசையன்விளை பெரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

திசையன்விளை: திசையன்விளை செல்வமருதூர் பெரியம்மன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நான்கு வேதங்கள் முழங்க தேவார திருமுறை பாராயணத்துடன் நடந்தது. பெரியம்மன் ஆலய கன்னி விநாயகர், முத்தாரம்மன், உலகம்மன், மாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா யாகசாலை வேள்விகளுடன் தொடங்கி விமான கலசங்களுக்கு புனித நீர் அபிஷேகம் 4 நாட்கள் நடந்தது.   

முதல்நாள் மங்கள இசை வாத்தியங்களுடன் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ேஹாமம், பூர்ணாகுதி தீபாராதனை மற்றும் வாஸ்து சாந்தியுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 2ம் நாள் காலை திருமுறை விண்ணப்பமும், மாலை அடைக்கலம் காத்த விநாயகர் அருள் ஆலயத்தில் இருந்து கங்கா பூஜை உடன் புனித நீர் கும்பங்களில் சேகரித்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு திருக்கோவிலில் சேர்க்கப்பட்டது.

தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. 3ம் நாள் காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையில் சிவசூர்ய பூஜை, தோரண பூஜை, வேதிகா பூஜை நடந்தது. இரவு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், சுமங்கலி பெண்கள் கலந்துகொண்ட மகாலட்சுமி பூஜையும் நடந்தது. பின்னர் பூஜிக்கப்பட்ட எந்திர தகடுகளை சுவாமி பீடத்தில் பதித்து பூஜைகள் நடந்தது. 4ம் நாள் அதிகாலை ரிக், யஜுர், சாம, அதர்வன வேத மந்திரங்கள் சமர்ப்பணத்துடன், தேவார திருமுறை பாராயணத்துடன் பஞ்ச வாத்தியங்கள் முழங்க, மேளதாள ராக கீர்த்தனைகளுடன் நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது.

தொடர்ந்து கடக லக்கனத்தில் விமான கும்பாபிஷேகம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 21 வகை திரவியங்களால் மகா அபிஷேகம், அர்ச்சனை நடந்தது.

Related Stories: