பென்னாகரம் அருகே கிராமத்திற்குள் புகுந்த யானைகள்: வனத்துறையினர் விரட்டியடித்தனர்

தர்மபுரி: பென்னாகரம் அருகே வனத்தை ஒட்டிய கிராமத்திற்குள் புகுந்த 2 யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். அந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டுவனஅள்ளி ஊராட்சி பவளந்தூர் கிராமத்தை ஒட்டி ஒகேனக்கல் வனப்பகுதியின் ஒருபகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானைகள் வெளியேறி வனத்தை ஒட்டிய கிராமங்களிலும், விளை நிலங்களிலும் நுழைவது வழக்கம். இந்நிலையில், நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள் பவளந்தூர் கிராமத்திற்குள் நுழைந்தது. பின்னர் அங்குள்ள விளை நிலங்களில் நுழைந்தது.

நேற்று காலை விவசாய பணிக்கு சென்ற விவசாயிகள் விளை நிலங்களில் நடமாடிய யானைகளை பார்த்து அலறியடித்து ஓடினர். இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் விரைந்து சென்று, அருகில் உள்ள வனப்பகுதிக்கு யானைகளை விரட்டினர். தற்போது பவளந்தூர் வனப்பகுதியில் 2 யானைகளும் முகாமிட்டுள்ளன. மீண்டும் அந்த யானைகள் கிராமங்களில் நுழையவும், விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு இடம்பெயர செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: