சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்: 'தல'தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது 41-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதாரண அணி வீரராக களமிறங்கிய தோனி, அவரது ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர். அவரது ஹெலிகாப்டர் ஷாட் எதிரணியின் பந்துவீச்சை திணறடித்துவிடும். களமிறங்கினால் வெற்றித்தான் என்ற குறிக்கோளுடன் விளையாடக்கூடியவர் தோனி. தனது திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியின் கேப்டனாக முடிசூட்டப்பட்டார். இவர் தலைமையிலான இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார்.இந்திய ராணுவத்தின் கௌரவ துணைநிலை கர்னல் பதவி என்ற கெளரவத்தையும் பெற்றிருக்கும் மகேந்திர சிங் தோனிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தோனிக்கு அனுப்பியுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், பிறந்தநாள் வாழ்த்துகள் எம்.எஸ்.தோனி; உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளை தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. எங்கள் சொந்த சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்,என பதிவிட்டுள்ளார்.

Related Stories: