நாகை அருகே இரு மீனவ கிராமங்கள் இடையே கடும் மோதல்: 2 கிராமங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கைது

நாகை: நாகை அருகே இருவேறு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொண்ட கும்பல், வீடு, வாகனங்களை அடித்து நொறுக்கி, சூறையாடியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேலபட்டினச்சேரி மற்றும் கீழ்ப்பட்டினச்சேரி மீனவர்களிடையே மோதல் நிலவி வருகிறது. மீன்பிடி துறைமுகத்தில் சமஉரிமை கேட்டு, மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசால் கட்டப்பட்ட துறைமுகத்தில் மேலபட்டினச்சேரி மீனவர்களுக்கும் மீன்விற்பனை மற்றும் ஏலம் விடுவதற்கு சமஉரிமை வழங்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் மேலபட்டினச்சேரி கிராம நிர்வாகிகள் சுரேஷ் மற்றும் மற்றொரு சுரேஷ் ஆகியோர் மீது மற்றொரு தரப்பு மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்றிரவு, நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலபட்டினச்சேரி மீனவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலபட்டினச்சேரி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ஊருக்குள் யாரும் இல்லையென்பதை அறிந்த வன்முறை கும்பல், அங்கு புகுந்து, வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடியது. அந்த கும்பல் வாகனங்களை அடித்து நொறுக்கியும், கற்களை வீசியும் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்ந்து மேலபட்டினச்சேரி மற்றும் கீழ்ப்பட்டினச்சேரி மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க தீவிர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. நாகை எஸ்.பி.ஜவகர் தலைமையில் அதிவிரைவுப்படை போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் 2 பேருக்கு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மோதல் காரணமாக 2 கிராமங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.        

Related Stories: