வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார் போலீஸ் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை: அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

அரக்கோணம்: அரக்கோணத்தில் கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஜோதிபுரத்தை சேர்ந்தவர் தளபதி(32), கூலி தொழிலாளி. இவரது மனைவி வீனா காயத்ரி. கணவன்- மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தளபதிக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், வீட்டிற்கு வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், வீனா காயத்ரி மனமுடைந்துள்ளார்.

இதுபற்றி அவர் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்தார். இந்நிலையில், அரக்கோணத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பில் புகார் குறைதீர்வு முகாம் 2 தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது.  இந்த முகாமிற்கு விசாரணைக்கு வரும்படி  போலீசார் தளபதியை  அழைத்தனர். இதனால், அவமானமடைந்த அவர், தனியார் திருமண மண்டபத்திற்கு  வந்தபோது, திடீரென பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை உடனடியாக மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தளபதி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து, அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: