பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஹேமந்த் சோரனின் ஆதரவு கிடைக்குமா?.. பழங்குடியினர் கட்சி என்பதால் எதிர்பார்ப்பு

ராஞ்சி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் ஆதரவு கோரியுள்ளார். ஆனால், காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளதால், இன்னும் எவ்வித அறிவிப்பும் வெளியாக வில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, நேற்று ஜார்கண்ட் சென்றார். ஜார்க்கண்டின் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களைத் தவிர, ஆளும் பழங்குடியினக் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஷிபு சோரன், அதன் செயல் தலைவர் மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரை திரவுபதி முர்மு சந்தித்தார்.

அப்போது தனக்கு ஆதரவு அளிக்கும்படி திரவுபதி முர்மு, முதல்வர் ஹேமந்த் சோரனிடம் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து ஜேஎம்எம் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், ஜனாதிபதி வேட்பாளருளான முர்முவிற்கு முதல்வர் ஹேமந்த் சோரன் அன்பான வரவேற்பு அளித்தார். அவருடன் ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, அன்னபூர்ணா தேவி, அர்ஜுன் மேக்வால், பாஜக மாநில தலைவர் தீபக் பிரகாஷ் ஆகியோரும் இருந்தனர்.

திரவுபதி முர்முவுக்கு எங்களது கட்சி ஆதரவு அளிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை’ என்றார். ஜார்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெறுகிறது. இந்த நிலையில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முக்கு ஹேமந்த் சோரனின் கட்சி ஆதரவு அளிக்குமா? என்பது கேள்வியாக உள்ளது.

Related Stories: