மயிலாடுதுறை அருகே குடிபோதையில் தகராறு விவசாயி சரமாரி வெட்டிக்கொலை; மகனுடன் மனைவி போலீசில் சரண்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை கொலை செய்த மனைவி, தனது மகனுடன் போலீசில் சரணடைந்தார். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த கொற்கையை சேர்ந்த விவசாயி மகாதேவன் (53). இவரது மனைவி அமுதா (37). இவர்களுக்கு ராஜராஜசோழன் (16), பாலமுருகன் (15) என்ற 2 மகன்கள் உள்ளனர். போதைக்கு அடிமையான மகாதேவன், அடிக்கடி மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

மேலும் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததுடன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். இந்நிலையில் நேற்றிரவு அமுதாவிடம் ரூ.500 வாங்கி கொண்டு, மகாதேவன் மது குடித்தார். மேலும் 2 பீர் பாட்டிலை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் இருந்த பிளஸ்2 படித்து வரும் மகன் ராஜராஜசோழன், ‘ஏன் அம்மாவை அடிக்கிறீர்கள்’ என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் மகாதேவன் கிழித்தார்.

இதை தடுக்க வந்த மனைவியை அரிவாளால் வெட்ட முயன்றார். அதை தடுத்து அரிவாளை பிடுங்கி மகாதேவன் கழுத்தில் அமுதா வெட்டினார். அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து மகாதேவன் இறந்தார். பின்னர் தனது மகனுடன் மணல்மேடு காவல் நிலையத்திற்கு சென்று அமுதா  சரணடைந்தார். மணல்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மகாதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த ராஜரோஜசோழன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணல்மேடு போலீசார் வழக்குப்பதிந்து அமுதாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மயிலாடுதுறை அருகே கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: