தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி ஒரு லட்சம் பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்யூர்: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி ஒரு லட்சம் பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைப்பெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு மகப்பேறு, நீரிழிவு நோய், காது, மூக்கு, தொண்டை பிரச்னை உள்பட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்,  கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,நேற்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இங்கு வந்து  ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து  முதலியார் குப்பம் பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், ‘தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாக பரவி வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  எனவே, பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.  தடுப்பூசி போடாதவர்கள்  தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, வரும் 10ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.

எனவே, தடுப்பூசி போடாதவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது  ஊரடங்கிற்கு  வாய்ப்பு இல்லை. அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் சில நாட்களில் நடக்கவுள்ள நிலையில், இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டு  தனிமனித இடைவெளி பின்பற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்’ என்றார்.

இந்த ஆய்வின்போது, காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம்,  செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு,  பேரூர் செயலாளர் இனியரசு, ஒன்றிய செயலாளர்கள்  எம்.எஸ்.பாபு, சிற்றரசு, பேரூர் துணை செயலாளர் மோகன்தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சூ. க. ஆதவன், வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி மற்றும் அனிதா உள்பட  பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஓதியூர் கிராமத்தில் மறைந்த சமூக சேவகர் எழிலரசு திருவுருவ சிலையினை  திறந்து வைத்தார்.

Related Stories: