ஷபாலி - மந்தனா அதிரடி ஆட்டம்: தொடரை வென்றது இந்தியா

பல்லெகலே: இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இலங்கை சென்றுள்ள இந்திய மகளிர் அணி  முதலில் விளையாடிய டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. அடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முன்னிலை வகிக்க, 2வது போட்டி பல்லெகலேவில் நேற்று நடந்தது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச, இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 173 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அமா காஞ்சனா ஆட்டமிழக்காமல் 47 ரன் விளாசினார். நிலாக்‌ஷி டி சில்வா 32, கேப்டன் சமரி அத்தப்பட்டு 27 ரன் எடுத்தனர். இந்திய வீராங்கனைகள்  ரேணுகா சிங் 4 (10-1-28-4), மேக்னா சிங், தீப்தி சர்மா தலா 2 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா - ஸ்மிரிதி மந்தானா அபாரமாக விளையாடி 25.4 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 174 ரன் எடுத்து இமாலய வெற்றியை பதிவு செய்தனர். ஷபாலி 71* ரன் (71 பந்து, 4 பவுண்டரி,  1 சிக்சர்), மந்தனா 94* ரன்னுடன் (83 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரேணுகா சிங் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 7ல் நடக்க உள்ளது.

Related Stories: