தோகைமலை பகுதியில் சாலையில் முறிந்து விழும் நிலையில் ஆபத்தான புளியமர கிளையை அகற்ற கோரிக்கை

தோகைமலை : தோகைமலை பகுதியில் உள்ள நெடுஞ்சாலைக்கு சொந்தமான பட்டுப்போன புளியமரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை பகுதி வழியாக தமிழக நெடுஞ்சாலைக்கு சொந்தமான மணப்பாறை -குளித்தலை மெயின் ரோடு உள்ளது. குளித்தலையில் இருந்து மணப்பாறைக்கு செல்லும் இச்சாலை சுமார் 42 கிமீ நீளம் உள்ளது.

பழமை வாய்ந்த சாலையின் இருபுறமும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு புளியமரம் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மரங்கள் சாலையில் செல்லும் இரு சக்கரவாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்லுபவர்களுக்கும் நிழலை தருவதுடன், மரங்களில் கிடைக்கும் புளிகள் மூலம் நெடுஞ்சாலைத்துறைக்கு ஆண்டுகள் தோறும் கனிசமான வருமானத்தையும் பெற்று தருகிறது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை இல்லாததால் நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள ஒரு சில புளிய மரங்கள் காய்ந்து பட்டுப்போனது. இதனால் காய்ந்த மரங்கள் சாலையில் விழுந்து வருகிறது. தற்போது கடந்த ஆண்டு பெய்த மழைக்கு பட்டுபோன புளிமரங்கள் வளர தொடங்கி உள்ளது. இருந்தபோதும் அந்த மரங்கள் வலுவிழந்து கானப்படுகிறது. இதனால் குளித்தலை -மணப்பாறை சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் ஒருசில இடங்களில் வாகனங்கள் மீது பட்டுப்போன மரங்கள் விழுந்து வாகனங்களை சேதப்படுத்தியும் மனிதர்களுக்கு உயிரிழைப்பும் ஏற்படுத்தி வருகிறது.

மேலும் பட்டுப்போன புளிய மரங்களின் கிளைகள் முறிந்து எப்போது கீழே விழுமோ என்று தினமும் அச்சத்துடன் ஒவ்வொரு நாளும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இதனால் வாகனஓட்டிகளின் நலன் கருதி ஆபத்தான நிலையில் உள்ள பட்டுபோன புளியமரங்களை அகற்ற வேண்டும் என்றும், அகற்றிய இடங்களில் புதிய மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க வேண்டும் என்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: