எனக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ராகுல் திராவிட் போன்று சிறந்தவர் யாரும் இல்லை; ரவிசாஸ்திரி பேச்சு

டெல்லி: எனக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ராகுல் திராவிட் போன்று சிறந்தவர் யாரும் இல்லை என்று ரவிசாஸ்திரி ராகுல் திராவிடுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். தான் வெறும் வர்ணனையாளர் என்றும் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு தனக்கு கிடைத்தது ஒரு தப்பிதமே என்றும் சுய விமர்சனமும் செய்து கொண்டார் ரவிசாஸ்திரி. ஸ்கை ஸ்போர்ட்ஸில் நாசர் ஹுசைன் மற்றும் மைக்கேல் ஆதெர்டனுடன் வர்ணையில் ஈடுபட்டிருந்த ரவிசாஸ்திரி கூறியதாவது: எனக்குப் பிறகு ராகுல் திராவிட் பயிற்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டது நல்லது அவரை விட சிறந்த ஒருவரை நாம் பார்க்க முடியாது, எனக்கு கோச் பணி கிடைத்தது ஒரு விபத்து மற்றும் அது ஒரு தப்பிதம். இதையேதான் நான் ராகுல் திராவிட் இடமும் கூறினேன்.

என்னை அந்த இடத்துக்கு அழைத்தார்கள் நான் என்னால் முடிந்ததை கொஞ்சம் செய்தேன். ஆனால் ராகுல் திராவிட் இந்த கிரிக்கெட் அமைப்பின் மூலம் உருவாகி வளர்ந்து வந்தவர். யு-19 கோச்சாக இருந்தவர், இப்போது இந்திய அணியின் பயிற்சிப் பொறுப்பை எடுத்துக் கொண்டுள்ளார். அவர் அதை மகிழ்ச்சியுடனேயே செய்கிறார். இவர் சொல்வதை அணி செய்யத் தொடங்கியவுடன் அவருக்கு மேலும் மகிழ்ச்சி பெருகும். கோச் பணி என்பது நன்றிகெட்ட ஒரு பணி. ஏனெனில் தினமும் 140 கோடி மக்களால் நீங்கள் தீர்ப்பளிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள்.

இதிலிருந்து தப்பி ஓடி ஒளிய முடியாது. தோட்டாக்கள் உங்களை நோக்கி பாயவே செய்யும். என்ன செய்கிறோம், வீரர்களின் ஆட்டம் தான் அங்கு பேசும். எதிர்பார்ப்புகள் அதிகம், நான் இருந்த அந்த 7 ஆண்டுகள் அணி நல்லவிதமாக ஆடியது எனக்குப் பெருமைதான். நான் பயிற்சியாளராக பொறுப்பெடுக்கும் முன் அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை, தரவரிசை இதனை காட்டும், ஆனால் என் பணி முடியும் போது அவர்கள் உயரத்தை எட்டினார்கள். அனைத்து வடிவங்களிலும்!!” என்றார் சாஸ்திரி.

Related Stories: