திருவள்ளூர் நகராட்சியில் சுற்றித்திரிந்த 42 பன்றிகள் பிடிபட்டன

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் மக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த பன்றிகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். திருவள்ளூர் நகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய வார்டு உறுப்பினர்கள், தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடன் சாலையில் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

எனவே, பன்றிகளை பிடிக்கவேண்டும் என்று புகார் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன், ‘பன்றிகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதி அளித்தார். இந்த நிலையில், நகராட்சி ஆணையர் ராஜலட்சமி உத்தரவின்படி, நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுதர்சன், களப்பணியாளர் கண்ணன் முன்னிலையில், நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம், பேருந்து நிலையம் அருகில் 11,1,4,27 ஆகிய வார்டுகளில் சாலையில் சுற்றித்திரிந்த பன்றிகளை வலையை வீசி பிடித்தனர். 10க்கும் மேற்பட்ட வார்டுகளில் 42 பன்றிகள் பிடிக்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

‘’தொடர்ந்து பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பன்றி வளர்ப்போருக்கு இது சம்மந்தமாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் பன்றிகள் அனைத்தும் பிடிக்கப்படும்’’ என்று நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தெரிவித்தார்.

Related Stories: