ஏலகிரி மலையில் 20 அடி கிராம சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு; அதிகாரிகள் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் 20 அடி கிராம சாலையில் தனி நபர் ஒருவர் 5 அடிக்கும் மேலாக சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டு வருவதால் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பல்வேறு பகுதிகளில் அரசு சார்ந்து சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் அத்தனை ஊர் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பெருமாள் கோயில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளக் கணியூர் சாலையுடன் இணைத்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. மேலும் இந்த சாலை ஆனது 20 அடி சாலையைக் கொண்டது. மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த சாலையானது குண்டும் குழியுமாக மாறியுள்ளது. ஆனால் இந்த கிராம சாலை வழியாக நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரியவர்கள் முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் வரை பயணிக்கின்றனர். மேலும் நிலங்களில் குடியிருப்பவர்கள் வீடு கட்டவும், விவசாய நிலங்களுக்கு தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லவும் ஆட்டோ, கார், லாரி போன்ற வாகனங்கள் செல்லக்கூடிய சாலையாக இருந்தது.

ஆனால் தற்போது பெருமாள் கோயில் பகுதியில் இருந்து கீழே செல்லும் சாலையானது அங்குள்ள தனி நபர் ஒருவரால் 5 அடிக்கும் மேல் சாலை ஆக்கிரமிக்கப்பட்டு நிலத்துடன் கற்களை அடுக்கி சமன் செய்துள்ளதால் 20 அடி சாலை குறுகி, போக்குவரத்துக்கு இடையூறாகவும் வாகனங்கள் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் அவசரமாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருவதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாலை ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்களின் போக்குவரத்து பாதிப்பை சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: