இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஊட்டியில் டைடல் பார்க் அமைக்கப்படும் : வனத்துறை அமைச்சர் தகவல்

ஊட்டி :  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஊட்டியில் விரைவில் டைடல் பார்க் அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:  தமிழக முதல்வர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். விவசாயத்திற்கு என தனி பட்ஜெட்டை உருவாக்கி, விவசாய பொருட்கள் பல மடங்கு உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மருத்துவத்துறையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்தியது மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களையும் காப்பாற்றினார்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம், கொரோனா முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இல்லம் தேடி மருத்துவம் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வரும் கல்விக்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லாதவாறு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ஊட்டியில் விரைவில் டைடல் பார்க் அமைக்கப்படும். அதேபோல், பல புதிய தொழிற்சாலைகளும் துவக்கப்படும். குன்னூர் மற்றும் கோத்தகிரி மாணவர்களின் நலன் கருதி குன்னூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும்.

 தமிழகம் முழுவதும் 2030க்குள் 33 சதவீதம் வனப்பரப்பினை அதிகரிக்க தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, அரசு துறைகளின் மூலம் பல்வேறு பகுதிகளிலும் 261 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு 33 சதவீதம் வனப்பரப்பினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Related Stories: