பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகள் கோயிலில் விரைவில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகள் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆணையர் குமரகுருபரன், உதவி ஆணையர்கள் பாஸ்கரன், ஹரிஹரன், கோயில் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர், அமைச்சர் ேசகர்பாபு கூறியதாவது: சென்னை, திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகள் கோயில் என வழங்கும் மயுரநாதர் கோயிலை, நிர்வாகம் செய்துவந்த காலஞ்சென்ற டி.டி.குப்புசாமி செட்டியார் தானாக முன்வந்து இத்துறையிடம் ஒப்படைத்தார்.

அன்று முதல் இன்றுவரை நிர்வாக அதிகாரி நியமனம் செய்யப்பட்டு நிர்வாகம் சிறப்பாக நடந்து வருகிறது. சென்னை உதவி ஆணையர் தக்காராக செயல்பட்டு வருகிறார். இக்கோயிலில் தினசரி நான்கு கால பூஜைகள் மற்றும் மாதந்தோறும் பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி ஆகிய நாட்களில் பூஜைகள் நடந்து வருகிறது. அன்னதான திட்டம் மூலம் தினசரி 300 பேருக்கும், விசேஷ நாட்களில் 500 பேருக்கும், திருவிழா காலங்களில் 800 பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், 1988ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு சில விக்கிரகங்கள் தானிய வாசத்தில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை மற்றும் மண்டபம் உபயதாரர் மூலம் கட்டப்பட்டது. தற்போது இந்த கோயிலுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுபடி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விரைவில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: