ரூ700 கோடி நில மோசடி வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படை

மதுரை: தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி, தாமரைகுளம், கெங்குவார்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.700 கோடி மதிப்புள்ள 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையோடு, அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளரும், ஓபிஎஸ்சிற்கு மிக நெருக்கமானவருமான அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டது. பெரியகுளம் ஆர்டிஓவாக இருந்த ஆனந்தி, ஜெயப்பிரதா, தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா உள்ளிட்ட பலர் மீது தேனி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

தற்போது இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துணை தாசில்தார் மோகன்ராம், தனக்கு ஜாமீன் கோரி மீண்டும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன், முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் ெதாடர்புடையவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, தேடி வருகின்றனர் விரைவில் கைது செய்யப்படுவர்’’ என்றார். அப்போது மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெறுவதாக கூறப்பட்டது. இதை அனுமதித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

Related Stories: