சோழவரம் உபரி நீர் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றும் தனியார் தொழிற்சாலை; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

புழல் : சோழவரம் ஏரியின் உபரி நீர் கால்வாயில், கழிவுநீரை வெளியேற்றும் தனியார் தொழிற்சாலை மீது, நடவடிக்கை எடுக்க கோரி, ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில்,  சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.  சோழவரம் ஒன்றியம் ஆங்காடு ஊராட்சியில், சோழவரம் ஏரியின் உபரி நீர் கால்வாய் அமைந்துள்ளது. சிறுனியம் செல்லும் சாலையில் பிரபல தனியார்  ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சோழவரம் ஏரியின் உபரி நீர் கால்வாயில் கலந்து செல்கிறது.

இதனால், ஆங்காடு ஊராட்சிக்குட்பட்ட பன்னீர்வாக்கம் கிராமத்தில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அந்த நீரை அப்பகுதியினர் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. மேலும், நோயைப் பரப்பும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, ஊராட்சி சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அந்த தொழிற்சாலை நிர்வாகம் மீது, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த கால்வாயில் இரண்டு எருமை மாடுகள் நீரை அருந்தியதாகவும், சிறிது நேரத்தில் அவை பரிதாபமாக இறந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஆங்காடு ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜாநித்தியானந்தம், துணைத்தலைவர் மதன்ராஜ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மதியம் சம்பந்தப்பட்ட தனியார் ஐஸ் தொழிற்சாலைக்கு சென்று, அங்கிருந்த அதிகாரிகளிடம் கழிவு நீர் பிரச்னை குறித்து எடுத்துரைத்தனர். அப்போது அவர்கள் அலட்சியமாக பதில் கூறினர். இதனால் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அந்த தொழிற்சாலை முன்பு திரண்டு, அதன்மீது, நடவடிக்கை எடுக்க கோரி,  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: