தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்க தலைவர் ஷீலா பிரேம்குமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவது தொடர்பாக கடந்த 23ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை.

அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப தடை விதிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். எனவேதான் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் இவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. இந்த தகுதி இல்லாத பட்சத்தில்தான் பிறர் நியமிக்கப்படுவர். தற்காலிக நியமனம் தொடர்பான பணிகள் ஜூலை 15க்கு பிறகே துவங்கவுள்ளது.  நியமனங்கள் அனைத்தும் விதிகளை பின்பற்றியே நடக்கும்’ என்றார்.இதை ஏற்க மறுத்த நீதிபதி, நிரந்தரமாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் ஏன் தயக்கம் என கூறி, தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை தள்ளி வைத்தார்.

Related Stories: