திருவில்லி. அருகே 4 ஆயிரம் ஆண்டு இரும்பு உருக்கு உலை தடயங்கள் கண்டுபிடிப்பு

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் உள்ள காவல்தோப்பு பேச்சியம்மன் கோயில் எதிரில், தொல்லியல் தடயங்கள் இருப்பதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு உள்ளிட்ட குழுவினருக்கு கிடைத்தது. இதையடுத்து குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். இதில், ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு இரும்புத்தாதுக்கள், இரும்புக்கழிவுகள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கல் சுத்தியல்களின் உடைந்த பாகங்கள், சுடுமண் குழாய்கள், கல்குண்டு ஆகியவை சிதறிக் கிடந்ததை கண்டறிந்தனர். இவைகள் பெருங்கற்கால இரும்பு உருக்கு உலையின் தடயங்களாகும்.இதுகுறித்து தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு கூறியதாவது:பெருங்கற்கால மக்கள் இயற்கையாகக் கிடைக்கும் இரும்புத்தாதுக்களை, உருக்கு உலைகள் மூலம் உருக்கி, இரும்பை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தனர். இரும்பை கொண்டு கத்தி, கோடரி, ஈட்டி, வேளாண் கருவிகளை தயாரித்து பயன்படுத்தியுள்ளனர். இதனால், பெருங்கற்காலத்தை இரும்புக்காலம் எனவும் அழைப்பர். பெருங்கற்கால பண்பாட்டு வளர்ச்சிக்கு இரும்பு உறுதுணையாக இருந்துள்ளது.

வெங்கடேஸ்வரபுரத்தில் இரும்புத்தாது கழிவுகளுடன், கல் சுத்தியல்களின் உடைந்த பாகங்களும் சிதறிக் கிடக்கின்றன. இரும்புத்தாதுவை கல் சுத்தியல் மூலம் சிறிதாக உடைத்து, ஊது உலையிலிட்டு உருக்கி, இரும்பைப் பிரித்து எடுத்துள்ளனர். . இங்கு நீள்வட்ட வடிவிலான இரு சுடுமண் உலைக்களங்கள் புதைந்த நிலையில் உள்ளன. திருவில்லிபுத்தூரை சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில், இயற்கையான இரும்புத்தாதுக்கள் அதிகளவு கிடைக்கின்றன. இதனால், இப்பகுதிகளில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களுடன் இரும்பு உருக்கு உலையின் தடயங்களும் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் தொல்பொருட்கள் மூலம் சுமார் 4 ஆயிரம் ஆண்டு பழமையான இரும்பு உருக்கும் தொழிற்சாலை, இவ்வூரில் இருந்திருப்பதை அறிய முடிகிறது. அகழாய்வு மூலம் அரசு இதை வெளிக்கொணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: