சின்னாளபட்டி அருகே செண்டுப் பூ சாகுபடி அமோகம்: கிலோ ரூ.50க்கு விற்பனை

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அருகே, கோட்டைப்பட்டி பகுதியில் செண்டுப் பூக்கள் சாகுபடி அமோகமாக உள்ளது. இப்பகுதியில் விளையும் பூக்களை கிலோ ரூ.50க்கு விற்பனை செய்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே உள்ள கலிக்கம்பட்டி, காந்திகிராமம், ஊத்துப்பட்டி, காமலாபுரம், பெருமாள்கோவில்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய கிராமங்களில் செண்டுப்பூ மற்றும் செவ்வந்தி பூக்களை பயிரிட்டு வருகின்றனர். திருமண விழாக்களுக்கு மாலை செய்ய செண்டுப்பூக்கள், மஞ்சள், மஞ்சளோடு கூடிய பளுப்பு நிறம், ஆரஞ்சு நிறப் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கோட்டைப்பட்டி அருகே உள்ள பகுதியில் பயிரிட்டுள்ள செண்டுப்பூக்கள் பூக்கள், ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கின்றன.

திண்டுக்கல் மார்க்கெட்டில் 1 கிலோ செண்டு பூ ரூ.50க்கு விற்கப்படுகிறது. தினசரி பூ விவசாயிகள் அதிகாலை நேரங்களில் பூக்களை பறித்து 7 மணிக்குள் நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். இதுகுறித்து செண்டு பூ விவசாயிகள் கூறுகையில், ‘செண்டுப்பூக்கள் செவ்வந்தியைப் போல நாற்று விட்டுத்தான் நடவு செய்யமுடியும். மண் வளத்தைப் பொறுத்து பூக்களின் நிறம் சிறிது மாறும். தற்போது 1 கிலோ ரூ.30க்கு விற்கப்படும் செண்டுப்பூ விசேச நாட்களில் 1 கி. ரூ.100 வரை விலை போகும்’ என்றார்.

Related Stories: